< Back
தேசிய செய்திகள்
பீகாரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
தேசிய செய்திகள்

பீகாரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

தினத்தந்தி
|
14 Nov 2024 5:17 AM IST

தர்பங்காவில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பீகார் சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தின் தர்பங்கா நகரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். விழாவில், முதல்-மந்திரி நிதிஷ் குமார், மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தர்பங்காவில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பீகாரின் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.

இது பீகாரின் மிதிலா, கோசி, திருஹட் பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நேபாளத்தில் இருந்து வரும் நோயாளிகளும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இது இங்கு பல வேலை வாய்ப்புகளையும் சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களின் நலன்களை காப்பதிலும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. எனவேதான், நாடு முழுவதும் 1.5 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கியா கோயில்களை நாடு முழுவதும் நாம் உருவாக்கி இருக்கிறோம். புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் நான்கு கோடி மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் வரை நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைதான் இருந்தது. சிறந்த சிகிச்சைக்காக ஒவ்வொருவரும் டெல்லிக்கு வர வேண்டிய நிலை இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 4-5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க ஆலோசனை நடத்தினார்கள். ஆனால், உரிய சிகிச்சை தொடங்கப்படவில்லை. எனது தலைமையிலான அரசு நாட்டின் அனைத்து மூலைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்கி இருக்கிறது. இன்று நாட்டில் சுமார் ஒரு டஜன் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்