காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக
|நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை தவறாக வழிநடத்தியற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்றும், மீறினால் திவால் நிலை ஏற்படும் என்றும், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இதன் மூலம், மக்களை தவறாக வழிநடத்தியதை காங்கிரஸ் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் அமலில் உள்ள பெண்களுக்கான இலவச பேருந்துப் பயண திட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து அம்மாநில காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இமாச்சலப் பிரதேச அரசு சம்பளத்தை வங்கியில் இருந்து எடுக்க வேண்டாம் என அரசு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடந்ததற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மராட்டிய காங்கிரஸுக்கு கூறிய பாடத்தை, மல்லிகார்ஜுன் கார்கே ராகுல் காந்திக்கு கற்பிப்பாரா? வாக்குறுதிகளை வெளியிடுவதில் ராகுல் காந்தி வல்லவர். வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களை முட்டாளாக்கக் கூடியவர்" என்றார்.