ஜாபர் சாதிக் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
|அமலாக்கத்துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாபர் சாதிக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளிவைக்கப்பட்டது.
புதுடெல்லி,
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என்றும், கைதை எதிர்த்தும் ஜாபர்சாதிக் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான அந்த மனு நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திரசர்மா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் எஸ்.ஹரிகரன், மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா ஆஜராகி, 'இந்த வழக்கு கடந்து வந்த பாதையை வரிசைப்படியாக தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ஜாபர் சாதிக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.