< Back
தேசிய செய்திகள்
சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் வரவழைப்பு
தேசிய செய்திகள்

சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் வரவழைப்பு

தினத்தந்தி
|
19 Nov 2024 4:35 AM IST

பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை,

நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் தினமும் 18 மணி நேரம் தரிசனத்துக்காக நடை திறக்கப்படுகிறது.

முன்பதிவு முறையில் 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசன பதிவு மூலம் 10 ஆயிரம் பேரும் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிற நிலையில் வருகிற 29-ந் தேதி வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனால் இனி உடனடி தரிசன முன்பதிவு மூலம் தான் அய்யப்பனை தரிசனம் செய்ய முடியும். இதனால் மண்டல பூஜையின் ஆரம்ப நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலை பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சன்னிதான பாதுகாப்பு சிறப்பு அதிகாரி பைஜு நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எனது தலைமையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 11 சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், 33 சப்-இன்ஸ்பெக்டர்கள், 980 போலீசார் சன்னிதானத்தில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், ஆயுதப்படை போலீசார், கமாண்டோ படையினர் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 18-ம் படியில் பக்தர்களை துரிதமாக ஏற்றி விடுவதற்காக 45 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் சபரிமலையில் பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க அனுபவம் பெற்ற சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்களை கையாள்வதில் அனுபவம் பெற்ற போலீசார் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்