நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
|நடிகர் சல்மான்கானுக்கு ரூ.2 கோடி கேட்டு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை,
பிரபல பாலிவுட் நட்சத்திரமான சல்மான்கானுக்கு பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கான் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மும்பை போக்குவரத்து போலீசின் வாட்ஸ்-அப் நம்பருக்கு சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பை போக்குவரத்து போலீசுக்கு வந்த தகவலின்படி, சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரை கொலை செய்து விடுவோம் என்று கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி போலீசார் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.