< Back
தேசிய செய்திகள்
நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷ் கைது; ஜாமீனில் விடுவிப்பு
தேசிய செய்திகள்

நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷ் கைது; ஜாமீனில் விடுவிப்பு

தினத்தந்தி
|
24 Sept 2024 3:29 PM IST

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மராடு போலீசார் கடந்த ஆகஸ்டு 29-ல் முகஷ் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

கொச்சி,

கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு கடந்த ஆகஸ்டில் வெளியிட்டது. இதில், நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் மோகன் லால் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனிடையே, ஹேமா கமிஷன் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 4 நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் நடிகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வான முகேஷும் ஒருவர். இந்த வழக்கை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனினும், எம்.எல்.ஏ. பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை என கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்தம் 16 எம்.பி.க்கள், 135 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் யாரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அச்சுறுத்தலுக்கான முயற்சியின் ஒரு பகுதி ஆகும் என கூறி குற்றச்சாட்டுகளை முகேஷ் நிராகரித்து உள்ளார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கொல்லம் தொகுதியின் எம்.எல்.ஏ. மற்றும் நடிகரான முகேஷ், எர்ணாகுளத்தில் சிறப்பு புலனாய்வு குழு முன் தன்னுடைய வழக்கறிஞருடன் சென்று இன்று ஆஜரானார்.

அவரிடம் 3 மணிநேர விசாரணை நடந்தது. இதன்பின்னர் அவர் இன்று அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவருடைய வாகனத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுபற்றி அவருடைய வழக்கறிஞர் கூறும்போது, இந்த மாத தொடக்கத்தில் செசன்ஸ் கோர்ட்டு ஒன்று நடிகர் முகேஷுக்கு முன்பே முன்ஜாமீன் வழங்கி விட்டது என கூறியுள்ளார். கேரளாவின் எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டு முகேஷுக்கு, கடந்த 5-ந்தேதி, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி, எந்த நாளிலும் காலை 9 மணியளவில் விசாரணை அதிகாரி முன் அவர் ஆஜராக வேண்டும். தேவைப்பட்டால், எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் விசாரணை நிறைவடையும் வரை அவர் ஆஜராகியிருக்க வேண்டும் என்றும் கோர்ட்டு தெரிவித்து இருந்தது.

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மராடு போலீசார் கடந்த ஆகஸ்டு 29-ல் முகஷ் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். ஆகஸ்டு 26-ல் அவர் மீது நடிகை பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினார். 6 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் டெஸ் ஜோசப், முகேஷுக்கு எதிராக மீடூ புகாரை தெரிவித்தபோது, அது கண்டுகொள்ளப்படாமல் போனது.

இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதும் இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்து உள்ளன. எனினும், உண்மையை மறைக்கும் நோக்குடன் கூடிய குற்றச்சாட்டுகளை கூறி, தன்னுடைய வாழ்க்கையை அழிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முகேஷ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்