நடிகர் தர்ஷன் விவகாரம் - 7 அதிகாரிகள் பணி இடைநீக்கம்
|சிறைக்குள் நடிகர் தர்ஷனுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 7 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,
கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகர் ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சிறைக்குள் 3 பேருடன், ஒரு கையில் சிகரெட்டையும் மறு கையில் ஒரு கோப்பையையும் தர்ஷன் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்த புகைப்படம் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறைக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியது. அதனைத்தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த ஐஜி தலைமையிலான விசாரணை குழுவை சிறைத்துறை டிஐஜி அறிவித்திருந்தார்.
இந்த குழுவினர் சிறையில் சிசிடிவிகள் மற்றும் இந்த புகைப்படத்தில் உள்ள கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை ஜெயிலர் உட்பட 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கர்நாடக சிறைத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன்பு வி.கே. சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோதும் இது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது தர்ஷனின் புகைப்படமும் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.