< Back
தேசிய செய்திகள்
ஸ்பேம் அழைப்புகளை நிறுத்த... டிராய் எடுத்த அதிரடி முடிவு
தேசிய செய்திகள்

ஸ்பேம் அழைப்புகளை நிறுத்த... டிராய் எடுத்த அதிரடி முடிவு

தினத்தந்தி
|
13 Aug 2024 8:50 PM GMT

தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளை பற்றி, ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 16-வது நாளில், சீராக தகவலை சமர்ப்பிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் தொலைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் அடிக்கடி ஸ்பேம் அழைப்புகள் வரும்போது அது வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக இருக்கும்.

சமீப காலங்களாக இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் வருவது அதிகரித்து உள்ளது என வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இதனை தடுக்கும் வகையில் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி, முன்பே பதிவு செய்யப்பட்ட அல்லது கணினியால் உருவாக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத அனுப்புநர்கள் அல்லது வணிக அழைப்பாளர்களிடம் இருந்து வரக்கூடிய விளம்பர நோக்கத்துடனான அழைப்புகளை அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுபற்றி, தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான உத்தரவுகளை தொலைதொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

இந்த உத்தரவின்படி, பதிவு செய்யப்படாத அனுப்புநர்கள் அல்லது பதிவு செய்யப்படாத வணிக அழைப்பாளர்கள் யாரேனும், வர்த்தக தொலைபேசி அழைப்புகளை உருவாக்கி, விதிமீறல்களில ஈடுபடுவது தெரிய வருமென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மீது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில், அந்த அனுப்புநரின் அனைத்து தொலைதொடர்பு விநியோகங்களையும், 2 ஆண்டுகளுக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும். இதேபோன்று அந்த அனுப்புநர் 2 ஆண்டுகளுக்கு கருப்பு பட்டியலில் வைக்கப்படுவார் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

24 மணிநேரத்தில், அனுப்புநர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும், பிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு பகிரப்பட வேண்டும். இதனை தொடர்ந்து, அந்த அனுப்புநருக்கு வழங்கிய அனைத்து தொலைதொடர்புக்கான விநியோகங்களையும் அவர்கள், அடுத்த 24 மணிநேரத்தில் நிறுத்தி விடுவார்கள்.

அந்த அனுப்புநருக்கு புதிய தொலைதொடர்புக்கான விநியோகங்கள் எதனையும் எந்தவொரு தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் ஒதுக்க கூடாது என தெரிவித்து உள்ளது.

இந்த உத்தரவுகளை அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 16-வது நாளில், நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளை பற்றி சீராக தகவலை சமர்ப்பிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.

டிராயின் இந்த நடவடிக்கைகளால், ஸ்பேம் அழைப்புகள் குறையும். வாடிக்கையாளர்களுக்கும் அதன் பாதிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்