< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம்filepic
தேசிய செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்க - பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம்

தினத்தந்தி
|
24 Jun 2024 1:31 PM GMT

மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உள்பட 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடந்த தேர்வை சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வின்போதே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்களை பெற்று இருந்தனர். அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் இந்த முழு மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்ததும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். பீகாரில் ஒரு வீட்டில் தீயில் எரிந்த நிலையில் இருந்த வினாத்தாள்கள்மற்றும் காசோலைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் தெரிவித்தது. அதனை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

இது ஒருபுறம் நடந்து கொண்டு இருந்த நிலையில். தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபோத்குமார் நேற்று முன்தினம் திடீரென்று நீக்கப்பட்டார். அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில் இந்திய வர்த்தக மேம்பாட்டு தலைவரான பிரதீப் சிங் கரோலியாவுக்கு அந்த பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பான வழக்கை மாநில போலீசார் விசாரித்து வந்தநிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக இந்த வழக்கு விசாரணையை சி பி ஐ தொடங்கியது. முக்கிய ஆவணங்கள் அடிப்படையிலும், மத்திய கல்வி அமைச்சகம் கொடுத்த குறிப்பின் பேரிலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது சிபிஐ அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் வேகம் பிடித்துள்ளது.

இந்தநிலையில், 'நீட்' தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை கோரி நாடு முழுவதும் மாணவர்கள் போராடிவரும் நிலையில், நீட் தேர்வை மாநில அரசுகள் நடத்த அனுமதிக்கக்கோரி பிரதமருக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வன்மையாக வலியுறுத்திக் கொள்கிறேன். நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்வுகள் மருத்துவ கல்வியின் தரம், சிகிச்சைகளின் தரத்தை வெகுவாக பாதிக்கும். ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி, நீட் தேர்வை மாநில அரசுகள் நடத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.இதன்மூலம் தேர்வு நடைமுறையின் மீதான மாணவர்களின் நம்பிக்கை மீண்டும் உருவாகுமெனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்