< Back
தேசிய செய்திகள்
அரியானா சட்டசபை தேர்தல்: 2- வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
தேசிய செய்திகள்

அரியானா சட்டசபை தேர்தல்: 2- வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

தினத்தந்தி
|
10 Sept 2024 1:15 PM IST

அரியானாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த திங்களன்று ஆம் ஆத்மி வெளியிட்டது. இந்தநிலையில், ஆம் ஆத்மி தனது 2- வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஹென்ரி, சதௌரா, தானேசர், ரதியா, அதம்பூர், பர்வாலா, டைகான், பரிதாபாத் மற்றும் பவால் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஹவா சிங் ஹென்ரியிலும், பிரவேஷ் மேத்தா பரிதாபாத்திலும் களமிறக்கப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரியானா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் சுஷில் குப்தா,

ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முழு பலத்துடன் போட்டியிடும். ஊழல் நிறைந்த பாஜக அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள்.அரியானா குற்றங்களின் தலைநகராக பாஜக மாற்றி உள்ளது. அரியானாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கியுள்ளன. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவின் மகன் என்றார்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய செப்.12 கடைசி தேதியாகும். 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டன. பொதுத்தேர்தலில், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு இடத்தை வழங்கியது, அதுவும் தோல்வியடைந்தது. கடந்த 2019 அரியானா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்