டெல்லி முதல்-மந்திரி வீட்டின் வெளியே மாசடைந்த நீரை ஊற்றிய ஆம் ஆத்மி எம்.பி.
|ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால் பாட்டிலில் அழுக்கடைந்த, கருப்பு நிற தண்ணீரை, கொண்டு வந்து டெல்லி முதல்-மந்திரி அதிஷியின் வீட்டின் வெளியே தரையில் ஊற்றினார்.
புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசுபாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாகன புகை, வேளாண் கழிவுகளை எரித்தல், ஆலையில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்டவற்றால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று தரக்குறியீடும் மோசமடைந்து காணப்படுகிறது.
இது குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டவர்களின் சுகாதார நலனிலும் பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியின் துவாரகா பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரம் குறைந்து காணப்படுகிறது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, துவாரகா பகுதிக்கு சென்ற ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி. சுவாதி மாலிவால், அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழாய் ஒன்றை திறந்து, பாட்டிலில் நீரை பிடித்துள்ளார்.
அதனை அப்படியே கொண்டு வந்து, டெல்லி முதல்-மந்திரி அதிஷியின் வீட்டின் வெளியே தரையில் ஊற்றினார். அந்த பாட்டிலில் இருந்த தண்ணீர் அழுக்கடைந்து, கருப்பு நிறத்தில், துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுபற்றி எம்.பி. மாலிவால் கூறும்போது, துவாரகாவின் சாகர்பூர் மக்கள் என்னை அழைத்து விவரங்களை கூறினர். நிலைமை மோசமடைந்து காணப்படுகிறது. இதனால், ஒரு வீட்டுக்கு சென்று, கருப்பு நிற நீரை சேகரித்து கொண்டு வந்து முதல்-மந்திரியின் வீட்டின் முன் ஊற்றினேன்.
நாங்கள் 2015-ம் ஆண்டில் இருந்து, அடுத்த ஆண்டு எல்லாம் சீராகி விடும் என கூற கேட்டு வருகிறோம். நான் கொண்டு வந்த இந்த கருப்பு நிற நீர்... இதனை டெல்லி மக்கள் குடிக்கவா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடிநீரின் நிலை மேம்படவில்லை எனில், துர்நாற்றம் வீசும் நீருடன் கூடிய லாரியுடன் வருவேன் என்று அவர் கூறியுள்ளார். முதல்-மந்திரி நீர் துறைக்கான மந்திரியாகவும் உள்ளார். தினமும் 10 பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி கேலியாக பொழுதுபோக்குவது அவருடைய வேலையா? என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.