பெண் டாக்டர் பலாத்கார சம்பவம்; சர்ச்சை வீடியோ வெளியிட்ட யூ-டியூப் பிரபலம்
|மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார சம்பவத்தில் சர்ச்சை வீடியோ வெளியிட்டதற்காக நிறைய பேரிடம் இருந்து பலாத்கார மிரட்டல்கள் வருகின்றன என யூ-டியூப் பிரபலம் கூறியிருக்கிறார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 23-ந்தேதி வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பிரபலம் வாய்ந்தவராக அறியப்படும் யூ-டியூபர் சாரா சரோஷ் என்பவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில், கொல்கத்தாவில் மருத்துவமனையின் உள்ளே பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டது பற்றி சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்களிடையே எதிர்ப்பும், கண்டனமும் வலுத்தது. இதனை தொடர்ந்து, அந்த வீடியோவை அவர் நீக்கி விட்டார். அந்த செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
இந்த விசயம் பற்றி தெரியாதவர்களுக்கு, தெரிய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஆனால், அதற்காக தயாரான அந்த வீடியோவில், குதித்தும், முட்டாள்தனத்துடன் நடந்து கொண்ட விதம் பற்றி புரிந்தது. உடனடியாக அதனை நீக்கி விட்டேன் என பதிலுக்கு பதிவிட்டு உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட அறிவிப்பில், நிறைய பேரிடம் இருந்து பலாத்கார மிரட்டல்கள் வருகின்றன. இந்த வீடியோவை வெளியிட்டதற்காக, அதன் தீவிரம் தெரிவதற்காக நான் கடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். வாழ்க்கையில், குறுகிய இடத்திற்குள் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணாக இருந்து பார்க்க வேண்டும் என்கின்றனர்.
நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். எனக்கோ அல்லது வேறு எவருக்கோ ஒருபோதும் இது நடக்க கூடாது. எந்த பெண்ணுக்கோ, ஆணுக்கோ அல்லது எந்தவொரு பாலினத்திற்கோ நடைபெற கூடாது என்று சரோஷ் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலைமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை வெளிப்படையாக பேச வேண்டும் என்பதே நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சரோஷ் அந்த வீடியோவில், என்னுடன் தயாராகுங்கள். என்னுடைய தோழி ஒருத்தி, எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து, அதில் முதுநிலை படிப்பை படித்து வருகிறார். ஒரு நாள் மாலை படித்து விட்டு, தூங்கி கொண்டிருக்கும்போது, பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
அவர், மருத்துவமனைக்குள்ளே பணியில் இருந்தபோது இது நடந்துள்ளது. அவருடைய பெற்றோருக்கு நான் என்ன கூற முடியும்? அந்த உடலை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? இந்த சமூகத்தினரை எப்படி பார்க்கிறார்கள்?
ஒரு பெண் பலாத்காரத்திற்கு ஆளாகும்போது, அவர் என்ன தவறு செய்து இருக்கிறார் என்றே இந்த சமூகம் பார்க்கும். அவரை சுற்றி இருந்தவர்கள் செய்த விசயங்களை பார்ப்பதே இல்லை.
இந்த டாக்டர்களே ஒரு சீட் கிடைக்க கடுமையாக போராடி, பின்பு கடினத்துடன் படித்து, ஒரு பட்டப்படிப்பை வாங்குகின்றனர்.
இந்த பெற்றோரே, தங்களுடைய குழந்தைகளுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய பல கனவுகளை தியாகம் செய்கின்றனர் என பதிவிட்டு உள்ளார்.
இறுதியில், அவர் என்னுடைய தோழி இல்லை என்றாலும் அவருடைய பெற்றோருக்கு நம்மிடம் இன்னும் பதிலேதும் இல்லை. அந்த மருத்துவமனையின் முதல்வரிடமும், பெண் டாக்டரின் பெற்றோரிடம் கூறுவதற்கு எந்த பதிலும் இல்லை என தெரிவித்து உள்ளார்.
அவர்களுடைய மகளை அவர்கள் இழந்து விட்டனர். அவர் கொடூர கொலை செய்யப்பட்டு விட்டார். நம் அனைவரிடமும் எந்த பதிலும் இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.