சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடல்; டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் பரபரப்பு
|நெடுஞ்சாலை அருகே கிடந்த சூட்கேசில் பெண்ணின் உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில், சந்தேகத்திற்குரிய வகையில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு பெண்ணின் உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த பெண்ணின் வயது சுமார் 25 முதல் 30 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த சூட்கேசில் சில உடைகளும் இருந்துள்ளன.
இதனிடையே சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலில் சில காயங்கள் இருந்ததாகவும், அந்த பெண் உயிரிழந்து ஒரு நாள் ஆகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.