இதயத்தில் காதலிக்கு இடம் கொடுத்து தேர்வில் வெளிப்படுத்திய மாணவன்...!! ஆசிரியையின் அதிரடி
|ஆசிரியை, மாணவன் வரைந்த படத்திற்கு பதிலாக, சரி உன்னுடைய பெற்றோரை அழைத்து வா என தெரிவித்து, 10-க்கு பூஜ்யம் என மதிப்பெண் வழங்கியுள்ளார்.
புதுடெல்லி,
தேர்வில் மாணவர் ஒருவர் உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சிகளின் மையம் ஆகவும், கற்பனையின் பிறப்பிடம் ஆகவும் இருக்க கூடிய இதயம் இளைஞர்களின் கண்ணோட்டத்தில் வேறு வகையாக பார்க்கப்படுகிறது.
தேர்வில் இதயம் பற்றிய வரைபடம் ஒன்றை வரைந்து, அதன் பாகங்களை குறிக்கும்படி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த கேள்விக்கு, ஈர்ப்பின் வெளிப்பாடாக அந்த மாணவர் இதயம் படம் ஒன்றை வரைந்து அதன் பாகங்களை குறித்த விதம் நெட்டிசன்களிடையே சிரிப்பை வரவழைத்து இருக்கிறது.
அவர், அப்படி என்ன செய்திருக்கிறார் என பார்ப்போம். அவர் இதயத்தின் உள்பாகங்களான ஏட்ரியம் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் ஆகியவற்றை பற்றி குறிப்பிடுவதற்கு பதிலாக, பிரியா, ரூபா, பூஜா, நமீதா மற்றும் ஹரிதா என மாணவரின் வாழ்வில் முக்கிய இடம் பிடித்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார்.
அந்த ஒவ்வொரு பெயருக்கும் அதன் செயல்பாடுகள் என்ற பெயரில் விளக்கமும் அளித்துள்ளார். இதில், பிரியா என்ற பெயருக்கு, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து சாட்டிங் செய்யும் தோழி என குறிப்பிட்டு உள்ளார்.
ரூபாவை அழகானவர் மற்றும் ஸ்நாப்சாட்டில் உரையாடுபவர் என நினைவுகூர்கிறார். இதுதவிர, இடமே இல்லாத சிறிய இடத்தில் நமீதா என குறிப்பிட்டு, நீண்ட தலைமுடி மற்றும் பெரிய கண்களை உடையவர் என்றும் குறிப்பிட்டு அதற்கான படமும் வரைந்துள்ளார்.
பூஜாவை முன்னாள் காதலி என குறிப்பிட்டு அழுகின்ற கண்களுக்கான படமும் அருகே வரைந்து வைத்திருக்கிறார். ஹரிதா என்னுடைய வகுப்பு தோழி என நிறைவு செய்திருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலான இந்த பதிவை 6.43 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
இதற்கு நெட்டிசன்களில் ஒருவர், குறைந்தபட்சம் அவருக்கு இதயத்திற்கு 4 அறைகள் உள்ளன என்று தெரிந்திருக்கிறது என பதிவிட்டு உள்ளார்.
முன்னாள் காதலியை மறக்க சகோதரர் முயற்சிக்கிறார் என்று மற்றொருவரும், சகோதரர் மிக நேர்மையாக இருக்கிறார் என்று இன்னொருவரும் தெரிவித்து உள்ளனர்.
எனினும், ஆசிரியை இதற்கு பதிலாக, சரி உன்னுடைய பெற்றோரை அழைத்து வா என தெரிவித்து, 10-க்கு பூஜ்யம் என மதிப்பெண் வழங்கியுள்ளார்.
ஒருவர், உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்றும், பிரியாவுக்கும், ரூபாவுக்கும் என்ன நடக்க போகிறது என பார்ப்போம் என மற்றொருவரும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த பதிலை பார்க்கும்போது, படிக்கும் மாணவர்கள் கற்கும்போது, அவர்களின் இதயத்தில் மகிழ்ச்சியும், நகைச்சுவையும் எப்போதும் நிறைந்திருக்கிறது என தெரிகிறது.