ஆண்கள் ஆடைகள் மீது விருப்பம்; திருமணம் செய்ய கூறிய தாய், தம்பி கொடூர கொலை: இளம்பெண் வெறிச்செயல்
|அரியானாவில் தாய், தம்பியை தீர்த்து கட்ட, பாட்டியின் வீட்டையும், ரூ.50 ஆயிரம் பணமும் தருகிறேன் என்று உறவினருக்கு இளம்பெண் ஆசை காட்டியுள்ளார்.
யமுனாநகர்,
அரியானாவின் யமுனாநகரில் வசித்து வந்தவர் மீனா. இவருடைய மகள் காஜல். கடந்த மே 13-ந்தேதி காஜலுக்கு 27 வயது ஆனது. காஜலுக்கு ராகுல் என்ற தம்பியும் உண்டு. இந்நிலையில், காஜலை திருமணம் செய்து கொள்ளும்படி தாய் மீனாவும், தம்பி ராகுலும் தொடர்ந்து கூறி வந்தனர்.
ஆனால், காஜலுக்கு இது பிடிக்கவில்லை. சுதந்திரத்துடன் இருக்க விரும்பியுள்ளார். டி-சர்ட், ஆண்களின் ஆடைகள் மற்றும் ஜீன்ஸ் ஆடைகளை வகை வகையாக விரும்பி அணிந்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பையன் போலவே தன் விருப்பம்போல் வாழ்ந்து வந்திருக்கிறார்.
ஆனால், தாய் மற்றும் தம்பி இதனை விரும்பவில்லை. இதனால், அவர்கள் இருவரையும் ஒழித்து கட்டுவது என திட்டமிட்ட காஜல் இதற்காக, மாமன் மகனான கிருஷ் (வயது 18) என்பவரை துணைக்கு அழைத்து இருக்கிறார்.
அவர்கள் 2 பேரையும் தீர்த்து கட்டுவதற்கு ஈடாக, பாட்டியின் வீட்டை தருகிறேன் என ஆசை காட்டியுள்ளார். அதுபோக ரூ.50 ஆயிரம் பணமும் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு 2 பேரையும் கிருஷ் படுகொலை செய்திருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் கடந்த திங்கட்கிழமை கிருஷை கைது செய்தனர்.
காஜலையும் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
காஜலின் பாட்டியான பாப்லிக்கு சாந்தி காலனியில் வீடு ஒன்று உள்ளது. பாப்லி இறப்பதற்கு முன் வீட்டுக்கு மீனாவை வாரிசாக்கி உள்ளார். இதனால், கிருஷ் வருத்தத்தில் இருந்துள்ளார். அந்த வீட்டை மீனா அவருடைய பெயருக்கு மாற்றி விடுவார் என பயந்து போயுள்ளார்.
காஜலின் தாய் வழி மாமாவான ஜெய்பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி உயிரிழந்து விட்டனர். இவர்களின் மகனே கிருஷ் ஆவார். மற்றொரு மாமாவான சிவம் தனியாக வசித்து வருகிறார். அவருடன் கிருஷ் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். பாப்லிக்கு கிரண் என்ற மகளும் உள்ளார். அவருக்கு திருமணம் நடந்து விட்டது.
வீட்டுக்கு மீனாவை வாரிசாக்கியதில் சிவமும், கிரணும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால், மீனாவுடனான அவர்கள் இருவரின் பேச்சுவார்த்தையும் நின்று போனது.
இந்நிலையில், கடந்த ஆண்டு காஜலும் வீட்டை விட்டு வெளியேறினார். சிறிது காலத்திற்கு பின்னர் வீடு திரும்பினார். அவருக்கு வயது ஏறி கொண்டே இருக்கிறது என்பதற்காக, தாயும், தம்பியும் திருமணம் செய்து கொள்ளும்படி காஜலை வற்புறுத்தினர். இதனை காஜல் மறுத்திருக்கிறார்.
காஜலின் ஆடை அணிதலையும் அவர்கள் விரும்பவில்லை. தொடர்ந்து தொந்தரவு செய்து வந்திருக்கின்றனர். ஆனால், காஜல் வீட்டின் மேல் தளத்தில் தனியாக வசித்து வந்திருக்கிறார். ஆண்கள் போல் ஆடையணிந்து வீடியோக்களை பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மீனாவை திட்டமிட்டபடி கடந்த ஞாயிறன்று, காஜலும், கிருஷும் சேர்ந்து தாக்கினர். மீனாவின் காலை காஜல் பிடித்து கொள்ள, கிருஷ் அவரை மூச்சு திணற செய்து கொலை செய்துள்ளார். இது எதுவும் தெரியாமல் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய ராகுலையும் இதேபோன்று தாக்கி, கொடூர கொலை செய்தனர்.
அவர்கள் இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த கொலைக்கு பின், கிருஷ் வெளியே சென்றதும், வீட்டில் இருந்த காஜல், மீனாவின் மொபைல் போனை எடுத்து வைத்து கொண்டார்.
சம்பவத்தன்று மதியம் மார்க்கெட்டுக்கும் போய் வந்திருக்கிறார். அந்த மொபைல் போன் வழியே, பழச்சாறு கொண்டு வரும்படி மீனா கேட்பது போல் காஜலே மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
இதனால், வீட்டில் இருந்தபடி மீனாவிடம் இருந்து காஜலுக்கு மெசேஜ் சென்றுள்ளது என போலீசார் நினைப்பார்கள் என காஜல் நினைத்திருக்கிறார். இதனை கொள்ளை சம்பவம் போல் காட்டவும் காஜல் திட்டமிட்டு செயல்பட்டார். வீடுகளில் பொருட்கள் விரவி கிடந்தன.
எனினும், போலீசார் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தியதில் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே, அவர்களிருவருக்கும் விஷம் அல்லது மயக்க மருந்து கொடுத்து பின்பு கொலை செய்யப்பட்டனரா? போன்ற விவரங்கள் தெரிய வரும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.