< Back
தேசிய செய்திகள்
திருமண மண்டபத்துக்குள் புகுந்த குரங்கு.. 8 பேரை கடித்து அட்டகாசம்
தேசிய செய்திகள்

திருமண மண்டபத்துக்குள் புகுந்த குரங்கு.. 8 பேரை கடித்து அட்டகாசம்

தினத்தந்தி
|
3 July 2024 1:32 AM IST

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் காப்பாற்றும்படி கூச்சலிட்டப்படி அலறியடித்து ஓடினர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா இரிசாவே கிராமத்தில் நுகேஹல்லா சாலையில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த சமயத்தில் குரங்கு ஒன்று அழையா விருந்தாளியாக திருமண மண்டபத்திற்கு வந்தது.

முதலில் அந்த குரங்கு அங்கிருந்த சிலரிடம் அமர்ந்து வேடிக்கை பார்த்தப்படி இருந்தது. மேலும் திருமண விருந்து நடந்த இடத்திற்கு விஜயம் செய்த குரங்கிற்கு இலை போட்டு சாப்பாடும் வழங்கப்பட்டது. அதை ருசித்து சாப்பிட்டு முடித்த குரங்கு தனது சேட்டையை தொடங்கியது.

அதாவது திருமண வீட்டுக்கு வந்திருந்த சிலரை அந்த குரங்கு பாய்ந்து பாய்ந்து கடித்து குதறியது. இதனால் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் காப்பாற்றும்படி கூச்சலிட்டப்படி அலறியடித்து ஓடினர். இதனால் திருமண மண்டபம் களேபரமானது.

இதையடுத்து சில வாலிபர்கள் வந்து, அந்த குரங்கை தடியால் அடித்து விரட்டினர். அதன்பிறகு அங்கிருந்து குரங்கு ஓட்டம் பிடித்தது. குரங்கு கடித்து குதறியதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் இரிசாவே கிராமத்தில் உள்ள சமூகநல மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்