டெல்லி: தனியார் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பக்கத்து மாடியில் குதித்து தப்பித்த மக்கள்
|தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் ஒரு தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல இன்று செயல்பட்டு வந்த உணவகத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் அங்கு உணவு சாப்பிட சென்றவர்கள் தீயில் சிக்கினர்.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிக்கியிருந்த மக்கள் உணவகத்தின் மாடியில் இருந்து அடுத்த கட்டிடத்தின் மாடிக்கு குத்தித்து உயிர் தப்பினர்.
வெகு நேர போராட்டத்திற்கு பிறகு தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.