இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்
|பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, செல்போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் அதை பதிவிடுவது வழக்கம். சம்பவத்தன்று இரவு அந்த பெண் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
பி.டி.எம். லே -அவுட் பகுதியில் செல்போனில் வீடியோ எடுத்தப்படி நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த 14 வயது சிறுவன், இளம்பெண்ணை பார்த்து கேலி செய்துள்ளான். ஆனால் அதை அந்த பெண் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து திரும்பி வந்த சிறுவன், இளம்பெண் அருகே வந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு 14 வயது சிறுவனால் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கூறி கண்ணீர்விட்டதுடன்,இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவனும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க மறுத்ததால் சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.