'உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 60 லட்சம் பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்' - அசாம் முதல்-மந்திரி
|உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலமாக அசாமில் இதுவரை 60 லட்சம் பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
திஸ்பூர்,
கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நேற்றைய தினம் தனது பா.ஜ.க. உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்ட பிரதமர் மோடி, இளைஞர்களை பா.ஜ.க.வில் சேர்க்க கட்சி தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலமாக இதுவரை 60 லட்சம் பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பா.ஜ.க. நடத்தி வரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலமாக லட்சுமி பூஜை திருநாளில் 60 லட்சம் பேர் இதுவரை பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். இந்த 60 லட்சம் பேர் கொண்ட பலமான குடும்பம், மக்களுடன் இணைந்து அயராது உழைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.