ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்... வானில் தெரியப்போகும் அரிய நிகழ்வு
|6 கிரகங்களை ஒரே நேர்கோட்டில் காண முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்பட அனைத்து கிரகங்களும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில், வெவ்வேறு சுற்றுப்பாதை வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களை நாம் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாக அமைகிறது.
பொதுவாக 3 அல்லது 4 கோள்களை ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த நிலையில் வரும் ஜூன் 3-ந்தேதி புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கிரகங்களை ஒரே நேர்கோட்டில் காண முடியும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வானில் நிகழ உள்ள இந்த அபூர்வ காட்சியை ஜூன் 3-ந்தேதி கிழக்கு திசையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலையில் சூரியனுக்கு மேல் பக்கத்தில் வெறும் கண்களால் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் சற்று தூரமாக இருப்பதால், பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது. இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பை மீண்டும் வரும் ஆகஸ்ட் 28-ந்தேதி, அதன் பின்னர் 2025-ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி, பிப்ரவரி 28-ந்தேதி மற்றும் ஆகஸ்ட் 29-ந்தேதி ஆகிய நாட்களிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.