மணிப்பூர்: தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கைது
|மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இரண்டு அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இம்பால்,
மணிப்பூரில் ஒராண்டுக்கும் மேலாக இனக்கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் அங்கு வன்முறை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் மணிப்பூரின் தவுபால் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இரண்டு அமைப்புகளைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன்படி மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தோக்சோம் பிக்ரம் சிங் (29), சினம் பிஜென் சிங் (37), தங்கஜம் தீபக் சிங் (30), லம்பமாயும் நவோபி சிங் (26), ஹுனிங்சும்பம் டோன் சிங் (21) என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களும், 5 செல்போன்கள், 13 சிம் கார்டுகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கையெறி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது.