உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
|உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லசாரி கேட் பகுதியை சேர்ந்த மொஹீன் என்பவரது வீடு கடந்த புதன்கிழமை முதல் பூட்டப்பட்டு கிடந்தது. அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்த வீட்டிற்குள் மொஹீன், அவரது மனைவி அஸ்மா, மகள்கள் அப்சா(8), அஜேசா(4) மற்றும் அதிபா(1) ஆகிய 5 பேரும் கொல்லப்பட்டு கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதில் மொஹீன் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் தரையில் கிடந்த நிலையில், அவர்களது 3 குழந்தைகளின் சடலங்களும் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தன. அனைவரது உடலிலும் காயங்கள் இருந்தன.
இதையடுத்து, தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் 5 பேரின் சடலங்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், முன்பகை காரணமாக இந்த படுகொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.