சபரிமலை சன்னிதானத்தில் பதற வைத்த சம்பவம்: பக்தர் எடுத்த விபரீத முடிவு
|சபரிமலையில் பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவில் சீசனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் குவிந்து வருகின்றனர். நாள்தோறும் சராசரியாக 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து, இருமுடி கட்டி 18 ஆம் படி ஏறி வருகின்றனர். கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு குவிந்து வருகின்றனர்
இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்று முன்தினம் மார்கழி மாத பிறப்பு என்பதால் அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். 18-ம் படி வழியாக செல்லும் பக்தர்கள் கோவில் சன்னிதான வளாகத்தில் உள்ள நடை மேம்பாலம் வழியாக தரிசனத்திற்கு செல்ல வேண்டும். மேம்பாலத்தில் வரிசையில் நின்று கொண்டு இருந்த ஒரு பக்தர் திடீரென நடை மேம்பாலத்தின் மேற்கூரையின் மீது ஏறி கீழே குதித்தார்.
இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தார். போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பக்தர் பரிதாபமாக இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த பக்தர் கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள கனகபுராவை சேர்ந்த குமார் (வயது40) என்பது தெரியவந்தது.
அவர் எதற்காக நடைபாலத்தின் மேற்கூரை மீது ஏறி குதித்தார் என்பது குறித்து காரணம் தெரியாததால், அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அந்த பக்தருக்கு ஏதேனும் மனநலப் பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து டாக்டரின் அறிக்கை கிடைத்த பிறகு ஆய்வு செய்யப்படும் என்று ஏ.டி.எம். அருண் எஸ்.நாயர் தெரிவித்தார்.