கடலில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு - கல்வி சுற்றுலா சென்றபோது விபரீதம்
|மாணவிகள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா கொத்தூர் பகுதியில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 46 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் உத்தரகன்னடா மாவட்டத்துக்கு கல்வி சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று முருடேஸ்வரில் உள்ள கடற்கரைக்கு வந்தனர். அப்போது மாணவ-மாணவிகள் அரபிக்கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.
அப்போது 7 மாணவிகள் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அந்த சமயத்தில் ஏற்பட்ட ராட்சத அலையில் 7 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அவர்களில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் 4 பேரும் கடலில் மூழ்கி பலியானது தெரியவந்தது.
சம்பவம் பற்றி அறிந்ததும் கடலோர காவல் படையினர், நீச்சல் வீரர்கள், போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடலுக்குள் இறங்கி 4 பேரையும் தேடினார்கள். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு மாணவியின் உடல் மீட்கப்பட்டது. மற்ற 3 பேரை மீட்க முடியவில்லை. விசாரணையில், கடலில் மூழ்கி பலியானது கோலார் மாவட்டம் முல்பாகலை சேர்ந்த ஸ்ரீவந்ததி, தீக்ஷிதா, லாவண்யா, வந்தனா என்பது தெரியவந்தது. இவர்களில் ஸ்ரீவந்ததி உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து பட்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.