ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 33 வழக்குகள் பதிவு - கேரள ஐகோர்ட்டில் மாநில அரசு தகவல்
|ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள ஐகோர்ட்டில் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை நடைபெற்று வருவதாக கேரள ஐகோர்ட்டில் அந்த மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் 11 வழக்குகள் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டவை என கேரள அரசு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டதாகவும், ஆதாரங்கள் இல்லாததால் 4 வழக்குகளின் விசாரணை முடிவடைந்தது எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் நீக்கப்பட்ட பகுதிகளை வெளியிடுவது தொடர்பான வழக்கின் உத்தரவை கோர்ட்டு ஒத்திவைத்தது. இந்த மனுக்களை வரும் 19-ந்தேதி நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், நீதிபதி சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.