45 நாட்களில் 30 படுகொலைகள்... டெல்லியில் ஜெகன் மோகன் தர்ணா போராட்டம்; இந்தியா கூட்டணி ஆதரவு
|டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஜெகன் மோகன், சமீபத்திய தேர்தலுக்கு பின்னர் ஆந்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து உள்ளது என கூறினார்.
புதுடெல்லி,
ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டாக கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் கூறும்போது, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் கீழ்த்தர செயல்களில் இந்த அரசு ஈடுபட்டு கொண்டிருக்கிறது. நான் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக எச்சரிக்கிறேன். அதிகாரம் நிரந்தரமல்ல. வன்முறை வழிகளை அவர் கைவிடவேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஜெகன் மோகன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர பிரதேசத்தில் சமத்துவ நீதி மறுக்கப்படுகிறது என்றும் ஜனநாயகம் மிதித்து நசுக்கப்படுகிறது என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, தெலுங்கு தேச கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 45 நாட்களில், 30-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலையே காணப்படுகிறது. தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இது கொலை முயற்சிக்கு வழிவகுக்கிறது.
490 அரசு சொத்துகள் சூறையாடப்பட்டு உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல் வழக்குகளும் பதிவாகி உள்ளன என்று கூறினார். சமீபத்திய தேர்தலுக்கு பின்னர் ஆந்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து உள்ளது என போராட்டத்தில் ஈடுபட்ட ஜெகன் மோகன் கூறினார்.
அவருக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சியினர் மற்றும் அ.தி.மு.க. தலைவர்களும் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, அதிகாரத்தில் உள்ளவர்கள் எளிமையை பின்பற்றி, மற்றவர்களையும் கவனிக்க வேண்டும். அவர்களின் உயிரை பறிக்க கூடாது என்றார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி. சஞ்சய் ராவத், எதிர்க்கட்சி தொண்டர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்கள் பற்றி தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். அவர்கள் ஆந்திர பிரதேசத்திற்கு சென்று விசாரிக்க வேண்டும் என்றார்.
இதேபோன்று அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவர் தம்பிதுரை கூறும்போது, ஆந்திர பிரதேசமோ, தமிழகமோ இதுபோன்ற அராஜகங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார். இதுபற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோருகிறோம். தமிழகத்தில் 200 நாட்களில் 595 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை இப்படி உள்ளது. இதுபோன்ற அராஜகங்கள் நடந்து வருகின்றன என்றார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமுல் காங்கிரசின் நதிமுல் ஹக் உள்ளிட்ட பல தலைவர்களும், ஆந்திர பிரதேச கவர்னர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு இதுபற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.