மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு
|ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணி வேகமாக நடைபெற்றது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தை சேர்ந்தவர் பிந்து சாகு. இவரது 3 வயது மகள், வயலில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தாள்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், சிறுமியை விரைவாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், இதுகுறித்து அறிந்த உள்ளூர்வாசிகள் அங்கு திரண்டனர்.
சுமார் 250 அடி ஆழ கிணற்றில், சிறுமி 25 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுமியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கிய மீட்புப் படையினர், ஐந்தரை மணி நேர முயற்சிக்கு பிறகு சிறுமியை வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமி கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.