உடற்பயிற்சியாளரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது
|6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து அனிசேக் சிங்கை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சோந்தவர் அனிகேத் சிங். உடற்பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அப்பான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்பான் தன்னிடம் கிரிப்டோ கரன்சி இருப்பதாகவும், இதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அனிகேத் சிங்கிடம் தெரிவித்து உள்ளார். இதனை நம்பிய அனிகேத் சிங், கிரிப்டோ கரன்சியை வாங்குவதாகக் கூறி ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்திற்கு பேரம் பேசியுள்ளார்.
அதன்பேரில் சம்பவத்தன்று அனிகேத் சிங், மிராரோடு சிக்னல் அருகே பணத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அப்பான் வந்து பணத்தை பெற்றபோது 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து அனிசேக் சிங்கை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து அனிகேத் சிங் பணத்தை பறித்த கும்பலை பிடிக்க விரட்டி சென்றார்.
இதற்கிடையில் அப்பான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த அனிகேத் சிங் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்தப்புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.