கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 3 பேர் மாயம்
|ஹெலிகாப்டர் கடலில் விழுந்த விபத்தில் மாயமான 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து கடலுக்குள் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலில் இருந்து காயமடைந்தவர்களை மீட்க கடலோரக் காவல்படையில் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் அனுப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கடலில் அவசரமாக தரையிறங்கியபோது விபத்துள்ளானது.
இதில் ஹெலிகாப்டரில் சென்ற ஒரு விமானி உள்பட 4 பேர் கடலில் விழுந்தனர். இந்த சம்பவம் தகவலறிந்த கடலோரக் காவல்படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹெலிகாப்டரில் சென்ற ஒரு விமானி மீட்புப்படையினரால் மீட்கப்பட்டார். மேலும் கடலில் விழுந்த 3 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேடுதல் பணியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய கடலோரக் காவல்படையின் இந்த இலகுரக ஹெலிகாப்டர் குஜராத் வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.