< Back
தேசிய செய்திகள்
சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
20 Nov 2024 9:01 AM IST

மண்டல பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் தினமும் 18 மணி நேரம் தரிசனத்துக்காக நடை திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்ட 15-ந் தேதி 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நடை திறக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை 5 நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். பாரம்பரிய காட்டு வழி பாதை (எருமேலி) வழியாக நடை பயணமாக வந்து 28 ஆயிரத்து 300 பேர் சபரிமலையில் தரிசனம் செய்து உள்ளனர்.

இடுக்கி புல்மேடு பாதை வழியாக நடை பயணமாக 106 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். வரும் நாட்களில் நடை பயணமாக சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

காட்டு வழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வனவிலங்குகளால் தொல்லை ஏற்படாமல் தடுக்க வன சரக அதிகாரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்