புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒருவர் மயக்கம்
|விஷவாயு தாக்கிய புதுநகர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுவை,
புதுச்சேரியின் ரெட்டியார்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 11ம் தேதி கழிவறைக்கு சென்ற மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட அவரது மகள் காப்பாற்ற சென்று, அவரும் மயங்கி விழுந்தார். தனது பாட்டி மற்றும் தாய் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட சிறுமி, அவர்களை காப்பாற்ற சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.
3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூதாட்டி செந்தாமரை மற்றும் காமாட்சி ஆகிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை வீட்டில் இருந்தவர்கள், உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புதுநகர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.