சல்மான் கானை கொலை செய்ய ரூ.25 லட்சம் பேரம்: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்
|மும்பையில் முன்னாள் மந்திரி பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்., 14ம் தேதி அதிகாலை அவர் வீடருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். அதில் குற்றவாளி ஒருவர், சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசார் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:- நடிகர் சல்மான் கானை கொலை செய்ய, ரூ. 25 லட்சம் பேரம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த பேரத்தை சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் பேசி உள்ளான். கொலையில் ஈடுபட புனே, ராய்காட், நவி மும்பை, தானே மற்றும் குஜராத்தில் உள்ள 18 வயதுக்கும் குறைவான சிறார்களை தேர்வு செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானை கொல்வதற்காக துருக்கி நாட்டின் ஜிகானா கைத்துப்பாக்கியை லார்ன்ஸ் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வகை கைத்துப்பாக்கியால்தான் பஞ்சாபின் பிரபல பாடகர் சித்து மூஸேவாலாவையும் லாரன்ஸ் கும்பல் சுட்டுக் கொன்றனர். மும்பையில் முன்னாள் மந்திரி பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர்.