< Back
தேசிய செய்திகள்
பீகாரில் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

பீகாரில் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
12 July 2024 7:30 PM IST

பீகாரில் மின்னல் தொடர்பான சம்பவங்களில் மட்டும் இந்த மாதம் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாட்னா,

பீகாரில் கடந்த சில வாரங்களாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. கோசி, பாகமதி, கந்தக், கம்லா மற்றும் அதார்வா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டியது. சில பகுதிகளில் கோசி ஆறு அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுபானியில் 6 பேர், அவுரங்காபாத்தில் 4 பேர், பாட்னாவில் 2 பேர், ரோஹ்தாஸ், போஜ்பூர், கைமூர், சரண், ஜெகனாபாத், கோபால்கஞ்ச், சுபால், லக்கிசராய் மற்றும் மாதேபுரா மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், இறந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மோசமான வானிலையின் போது தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுரைகளைப் பின்பற்றவும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார். பீகாரில் மின்னல் தொடர்பான சம்பவங்களில் மட்டும் இந்த மாதம் 70 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்