ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் திடீர் ராஜினாமா
|ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேரின் ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி,
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அங்கு தற்போது சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக உள்ளார். அதேசமயம் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களான பீதா மஸ்தான் ராவ் ஜாதவ் மற்றும் வெங்கடரமண ராவ் மோபிதேவி ஆகிய இருவரும் தங்கள் சபை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அவர்களின் ராஜினாமாவை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூன் 2028ம் ஆண்டு பதவிக்காலம் முடிவடைய இருந்த மஸ்தான் ராவ் முன்னதாக தெலுங்கு தேச கட்சியில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மீண்டும் தெலுங்கு தேச கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல ஜூன் 2026ம் ஆண்டு வரை பதவிக்காலம் இருக்கும் மோபிதேவியும் தெலுங்கு தேசம் கட்சியில் சேரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.