சத்தீஷ்காரில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி
|மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஜம்தாரா கிராமத்திற்கு அருகே, குகை ஒன்றில் வெள்ளை களிமண்ணை தோண்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் திடீர் என்று சரிந்து விழுந்தது.
இதில் 2 பேர் மண்ணில் புதைந்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரனை மேற்கொண்டனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட தகவல்களின்படி, சில கிராமவாசிகள் சேர்ந்து மண் தோண்டிக்கொண்டிருந்தபோது, ஒரு பகுதி மண் குகைக்குள் சரிந்தது. அதன் காரணமாக அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலியானவர்கள் ஹிராமன் யாதவ் மற்றும் ஷிவா யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.