பைக் சாகசம் செய்து கொண்டே ரீல்ஸ் எடுத்த நண்பர்கள்... காரில் மோதி உயிரிழப்பு
|இரண்டு நண்பர்கள் பைக்கில் சாகசம் செய்து கொண்டே ரீல்ஸ் எடுத்தபோது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்,
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வதற்காக பலர் தங்களது உயிரையும் துச்சமாக எண்ணி ரிஸ்க் எடுத்து வருகின்றனர். இதில் சில விபத்துக்கள் ஏற்பட்டு ஒரு சிலர் தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இரண்டு நண்பர்கள் பைக்கில் சாகசம் செய்து கொண்டே ரீல்ஸ் எடுத்தபோது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜ்கர் தொழிற்சாலை பகுதியில் இரண்டு நண்பர்கள் பைக்கில் நின்றபடி சாகசம் செய்துகொண்டே செல்போனில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். அப்போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மறுபுறம் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற நிஷாந்த் சைனி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த தீபக் சைனி என்பவர் உடனடியாக ராஜ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, தீபக் அங்கிருந்து ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்துக்குள்ளான காரின் டிரைவர், காரை அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.