புதிய வகை தொற்று : இந்தியாவில் பாதிப்பு 7 ஆக உயர்வு
|மராட்டியத்தின் நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.
நாக்பூர்,
சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. உலக அளவில் எச்.எம்.பி.வி. தொற்று ஏற்கனவே பரவி காணப்படுகிறது. கடந்த காலத்தில் இந்த தொற்றுடன் தொடர்புடைய சுவாச பாதிப்புகள் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இந்த தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கிய சூழலில், நாடு முழுவதும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஐ.சி.எம்.ஆர். ஈடுபட்டு வருகிறது. இதில், இந்தியாவில் தொற்று பாதிப்பு எதுவும் அதிகரித்து காணப்படவில்லை என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நேற்று 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை உறுதி செய்தது. இதன்படி, பேப்டிஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு தொற்று உறுதியானது.
இதேபோன்று, கடந்த 3-ந்தேதி 8 மாத ஆண் குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை குணமடைந்து வருகிறது.
இந்த 2 குழந்தைகளுக்கும் வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததற்கான கடந்த கால பின்னணியும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று, குஜராத்தில் ஆமதாபாத் நகரில் உள்ள 2 மாத ஆண் குழந்தைக்கும், சென்னையில் 2 குழந்தைகளுக்கும் தொற்று உறுதியானது.
இந்நிலையில், மராட்டியத்தின் நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.
நாக்பூர் நகரில் ராம்தாஸ்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தைகளை பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். இதில், பரிசோதனைக்கு பின்னர் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதியாகி உள்ளது.
7 மற்றும் 14 வயதுள்ள 2 குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்துள்ளது. இதனால், அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தொற்று எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில், மராட்டியத்தில் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அச்சப்பட வேண்டாம் என்றும் மராட்டிய சுகாதார துறை கேட்டு கொண்டுள்ளது. இதுபற்றி விரைவில் வழிகாட்டு நடைமுறைகளையும் வெளியிட உள்ளது.