
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே துறையின் தோல்வியை காட்டுகிறது - ராகுல்காந்தி

டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் மீட்பு பணிகளுக்காக தீ அணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். விடுமுறை தினம் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமாகவும், துயரமாகவும் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
கும்பமேளாவுக்கு அதிகளவில் மக்கள் செல்வதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ரெயில்வே துறையின் தோல்வியையும், அரசின் உணர்ச்சியற்ற தன்மையையும் இந்த சம்பவம் மீண்டும் காட்டியுள்ளது. கும்பமேளாவுக்கு செல்லும் மக்கள் யாரும் உயிரிழக்கக்கூடாது என்பதை அரசாங்கமும் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.