< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் கோவில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து: 154பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

கேரளாவில் கோவில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து: 154பேர் படுகாயம்

தினத்தந்தி
|
29 Oct 2024 7:43 AM IST

கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்தபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரில் உள்ள அஞ்சுதம்பலம் வீரரேர்கவு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன.

கோவில் திருவிழா வான வேடிக்கைகளின் போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி, குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளின் மீது விழுந்து எரிந்தது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் சின்னா பின்னமாக வெடித்து சிதறின.

கோவில் திருவிழாவில் வானவேடிக்கையை ரசித்துக் கொண்டிருந்த பக்தர்களும் பொதுமக்களும் வெடித்துச் சிதறிய பட்டாசுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டு அலறித் துடித்தனர். இந்த சம்பவத்தில் 154 பேர் படுகாயமடைந்த நிலையில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகர் கூறுகையில்,

பட்டாசுகள் அனுமதியின்றி குடோனில் வைக்கப்பட்டிருந்தன. இந்த விபத்து தொடர்பாக கோவில் நிர்வாக குழு தலைவர், செயலாளரை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்றார். கேரளாவில் கோவில் திருவிழாவின்போது வெடிவிபத்து ஏற்பட்டு 154 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்