பூரி ஜெகநாதர் கோவில் திருவிழா: பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் பலி
|மேலும் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பூரி,
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் நேற்று சந்தன் ஜாத்ரா திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு நரேந்திர புஷ்கரிணி நீர்நிலையின் கரையில் திருவிழா சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சில பக்தர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசு குவியல் தீப்பற்றி வெடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தகள், தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும், இங்குமாக ஓடினர். அவர்களில் சிலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தண்ணீரில் குதித்தனர். இந்த விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.