மத்திய பிரதேசத்தில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் காயம்
|ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் கமாரியாவில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் எரிபொருள் நிரப்பும் பிரிவில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஒருவர் காணவில்லை என்றும் அவர் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தொழிற்சாலையில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.