நள்ளிரவில் நடந்த கோர விபத்து.. 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பலி
|குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து, டெம்போ மீது மோதியது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சுமிபூர் அருகே நேற்று நள்ளிரவில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து, டெம்போ மீது மோதியது. இதில் டெம்போ தூக்கி வீசப்பட்டது. அதில் இருந்தவர்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடினர். பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இந்த கோர விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பாரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.