
பைக் திருட்டில் 'செஞ்சுரி' போட்ட ஆட்டோ டிரைவர்: பெங்களூருவில் கைது

கடந்த 3 ஆண்டுகளாக தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
பெங்களூரு,
ஆந்திராவைச் சேர்ந்தவர் பிரசாந்த்(30). ஆட்டோ ஓட்டுநரான இவர், மெக்கானிக் தொழிலும் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தென் இந்திய மாநிலங்களில் நூதன முறையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். 'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்று கூறுவது போல, பிரசாத பாபு தற்போது பெங்களூரு போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.
அவரிடம் இருந்து 20 ராயல் என்பீல்டுகள், 30 பல்சர் பைக்குகள், 40 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள என்பீல்ட் புல்லட்டை சிறு ஸ்குரூடிரைவரைக் கொண்டு சர்வ சாதாரணமாக லாக்கை உடைத்து லாவகமாக திருடுவதை போலீசார் முன்பு செய்து காட்டினார்.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 112 பைக்குகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பைக்குகள் தமிழ்நாடு போலீசாரிடம் பெங்களூரு போலீசார் ஒப்படைத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர், தற்போது பிடிபட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பேசுபொருளாகியுள்ளது.