அமைதி ஒப்பந்தங்களால் அசாமில் வன்முறையை கைவிட்ட 10 ஆயிரம் இளைஞர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
|அசாமில் மட்டும் அமைதி ஒப்பந்தங்களால் ஆயுதங்கள் மற்றும் வன்முறையை கைவிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் போடோலேண்ட் மகோத்சவம் என்ற பெயரிலான 2 நாள் நிகழ்ச்சி நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அமைதியை பலப்படுத்தவும் மற்றும் ஒரு துடிப்பான போடோ சமூகம் உருவாவதற்காகவும், மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம் பற்றிய 2 நாள் நிகழ்ச்சியாக இது நடத்தப்படுகிறது.
இதில் பேசிய பிரதமர் மோடி, அசாமில் மட்டும் அமைதி ஒப்பந்தங்களால் ஆயுதங்கள் மற்றும் வன்முறையை கைவிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கர்பி அங்லோங் அமைதி ஒப்பந்தம், புரூ-ரியாங் ஒப்பந்தம் மற்றும் என்.எல்.எப்.டி. திரிபுரா ஒப்பந்தம் போன்றவை உண்மையாகும் என ஒருவரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்கமாட்டார்கள். இவை எல்லாம் உங்களால் ஏற்பட்டு உள்ளது என்று பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
காகிதத்தில் மட்டுமே இந்த ஒப்பந்தம் தொடர்ந்து இருந்திருந்தால், மற்றவர்கள் என்னை நம்பியிருக்கவேமாட்டார்கள். ஆனால், இதனை உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்று கொண்டிருக்கிறீர்கள். போடோ அமைதி ஒப்பந்தம், உங்களுக்கு மட்டும் பலன் ஏற்படுத்தவில்லை. அது, பல அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது என்றார்.
தொடர்ந்து அவர், கைகளில் துப்பாக்கிகளை ஏந்திய இளைஞர்கள், விளையாட்டு துறையில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். போடோலேண்ட் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று, அசாம் அரசும் சிறப்பு நிதியை வழங்கியுள்ளது. போடோலேண்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் தொடர்புடைய உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.700 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்பட்டு உள்ளது என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.