ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
|இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதற்காக மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும். இதில், ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டு உள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் https://www.drbkak.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
விற்பனையாளர் (Salesman) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்றும் கட்டுநர் (Packer) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.