ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, 2024–2025-ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2024–2025-ஆம் கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே கல்லுரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் (Renewal) மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல் மாணவர்கள் கல்லூரிகளில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2024–2025-ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி UMIS (https://umis.tn.gov.in/ ) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதிய கல்லூரி மாணவர்கள் கீழ்காணும் ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
1.வருமானச் சான்றிதழ் (பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்).
2. சாதிச் சான்றிதழ் (வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளை பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்).
3. மாணாக்கரின் ஆதார் எண்ணுடன் மாணாக்கர்களின் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும். அவ்வங்கிக் கணக்கு செயல்பாட்டில் (Active) உள்ள கணக்காக இருக்க வேண்டும்.
இவ்விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து ஆதிதிராவிடர், கிறித்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.01.2025."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.