சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
|இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் சரிவுடன் முடிவடைந்தது.
மும்பை
இந்திய பங்குச்சந்தைகள் இன்று சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. ஆனால் வர்த்தக முடிவில் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று கடும் சரிவு ஏற்பட்டதால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.
ஆனால் இன்று காலை பிஎஸ்இ சென்செக்ஸ் 138.74 புள்ளிகள் குறைந்து 80,081.98 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி 36.60 புள்ளிகள் குறைந்து 24,435.50 என்ற புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 13 சதவீதம் அதிகரித்து ரூ.4,014 கோடியாக அறிவித்ததை அடுத்து, அந்நிறுவன பங்குகள் 5 சதவீதம் உயர்ந்தது.
டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி, பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவன பங்குகளும் லாபத்துடன் கைமாறின. சன் பார்மா, பவர் கிரிட், என்.டி.பி.சி., அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி மஹிந்திரா மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன.
ஆசிய சந்தைகளில், சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்வுடன் நிலைபெற்றன, டோக்கியோ பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவுடன் முடிவடைந்தன.
நேற்று பிஎஸ்இ சென்செக்ஸ் 930.55 புள்ளிகள் சரிந்து 80,220.72 ஆக இருந்தது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 309 புள்ளிகள் சரிந்து 24,472.10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.