பங்குச்சந்தை சரிவு: முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு
|கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது. கடந்த வாரம் சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்த நிலையில், இந்த வாரத்தின் முதல் 2 நாட்கள் வீழ்ச்சியை தொடர்ந்து இன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அதன்படி, நிப்டி 546.80 புள்ளிகள் சரிந்து 25,250.10 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 1,769.19 புள்ளிகள் சரிந்து 82,497.10 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. அதேபோல பின் நிப்டி, பேங்க் எக்ஸ், மிட்கே ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், லார்சன் அண்ட் டார்போ, ஆக்ஸிஸ் வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி, கோடாக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எப்.சி பங்குகள் பின்னடைவைச் சந்தித்தன. நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிப்டி ஆகியவை தலா 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும். சீனாவில் வழங்கப்பட்ட ஊக்க சலுகைகளால் அந்நாட்டு பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளது.