< Back
தங்கம்
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம்

தங்கம்

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..?

தினத்தந்தி
|
21 Oct 2024 9:59 AM IST

தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னை,

மார்ச் மாதம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலை அதிரடியாக சரிந்தது. அன்றைய நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 குறைந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவும் விலை சரியத் தொடங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.50 ஆயிரத்து 640-க்கு வந்தது. ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் செல்லும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அந்த நிலை அப்படியே மாறியது. எந்த அளவுக்கு குறைந்து வந்ததோ, அதே வேகத்தில் மீண்டும் உயர ஆரம்பித்தது. ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்தது. அதன் பின்னரும் விலை உயர்ந்து, கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.55 ஆயிரத்தையும் தாண்டியது.

மேலும் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டு, ரூ.56 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.

இந்த ஏற்ற, இறக்கத்துக்கு கடந்த 16-ந் தேதி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போல, ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது. ரூ.57 ஆயிரத்தை கடந்த 3-வது நாளில் ரூ.58 ஆயிரத்தையும் தங்கம் விலை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 280-க் கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 300-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,640 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுவிட்டது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது அதிகம் விழத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவும், தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் நெருங்குவதாலும் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதால், இதன் விலை உயர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்