< Back
வணிகம்
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
வணிகம்

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

தினத்தந்தி
|
31 Oct 2024 10:36 AM IST

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்ட நிலையில், அதன்பின்னர், மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை மளமளவென சரிந்து, ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதன் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. எந்த வேகத்தில் விலை குறைந்ததோ, அதைவிட அசூர வேகத்தில் விலை அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது. ரூ.57 ஆயிரத்தை தொடும் நிலைக்கு வருவதும், பின்னர் குறைவதுமாக இருந்தது.கடந்த 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் பதிவு செய்தது. அதற்கு பிறகும் விலை குறைந்தபாடில்லை. பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலும், ஓரிரு நாட்கள் லேசான இறக்கத்திலும் காணப்பட்டது. இதனால் கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாகவும் தங்கம் விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் , தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்து , ஒரு பவுன் ரூ.59,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கு விற்பனை செய்யப்படுகிறது . இதன் மூலம் தங்கம் மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்